மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப் செயலி, பழைய அண்ட்ரோய்ட் இயங்குதளங்களில் (OS) தனது சேவையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி, 2026 செப்டெம்பர் 8-ஆம் திகதி முதல் அண்ட்ரோய்ட் 6.0 (Android 6.0) பதிப்பிற்கு முந்தைய பதிப்புகளில் இயங்கும் கையடக்க தொலைபேசிகளில் வட்ஸ்அப் செயல்படாது.
வட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.
இந்த புதிய தொழில்நுட்ப வசதிகள் தடையின்றி செயற்பட சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் (Hardware) செயல்திறன் அவசியமாகும்.
பழைய இயங்குதளங்கள் இந்த நவீன மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாத காரணத்தால், பயனர் பாதுகாப்பையும் செயல்திறனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வட்ஸ்அப் பயன்படுத்த அண்ட்ரோய்டு 5.0 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்புகள் தேவைப்படுகின்றது.
புதிய அறிவிப்பின்படி, அண்ட்ரோய்ட் 5.0 மற்றும் 5.1 பதிப்புகளில் இயங்கும் கையடக்க தொலைபேசிகளில் செப்டெம்பர் 8 முதல் இந்த சேவை நிறுத்தப்படும்.
இந்த மாற்றம் அண்ட்ரோய்ட் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ஐபோன் (iPhone) பயனர்களுக்கு இதில் எந்த பாதிப்பும் இல்லை.
அவர்கள் வழக்கம் போல் iOS 15.1 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகளில் வட்ஸ்அப்பைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
குறிப்பாக இந்தியா, பிரேசில், பாகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் சில பகுதிகளில் இன்னும் பழைய மொடல் கையடக்க தொலைபேசிகளில் பயன்பாட்டில் இருப்பதால், அங்குள்ள பயனர்கள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
உங்கள் கையடக்க தொலைபேசி அண்ட்ரோய்ட் 6.0-க்கு கீழ் இருந்தால், மென்பொருள் அப்டேட் (Software Update) ஏதேனும் உள்ளதா எனச் சரிபார்க்கவும்.
தரவுகளை இழப்பதைத் தவிர்க்க, கூகுள் ட்ரைவ் (Google Drive) மூலமாகவோ அல்லது உள்ளக சேமிப்பகத்திலோ (Internal Storage) உங்கள் Chatகளை பேக்கப் எடுத்துக்கொள்ளுமாறு வட்ஸ்அப் அறிவுறுத்தியுள்ளது.
உங்கள் கையடக்க தொலைபேசிகளில் மென்பொருள் அப்டேட் செய்ய முடியாவிட்டால், செப்டெம்பர் 8-க்கு பிறகு வட்ஸ்அப் மற்றும் வட்ஸ்அப் பிசினஸ் செயலிகளைத் தொடர்ந்து பயன்படுத்த புதிய கையடக்க தொலைபேசிக்கு மாற வேண்டியது அவசியமாகும்.