இலங்கை மின்சார சபை காரியாலயத்தின், பாதுகாப்பு சுவரில் ஜீப் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியதில், அப்பகுதியில் பல மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஜீப் வண்டியின் சாரதியும் அவருடன் இருந்த உதவியாளரும் உயிர் தப்பியுள்ளதுடன், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மணிக்கூட்டுக்கோபுரப் பகுதியிலிருந்து கித்துலுத்து நோக்கிப் பயணித்த பொரொலோ (Prado) ரக ஜீப் வாகனம், சாரதியின் நித்திரை கலக்கத்தால் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, மின்சார சபையின் சுற்றுமதிலை உடைத்துக்கொண்டு, அங்கிருந்த மின் கம்பத்தில் மோதியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தினால் இலங்கை மின்சார சபைக்கு சுமார் 2 இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தையடுத்து, கந்தளாய் நகரின் பல பகுதிகளில் பல மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மின்சார சபை பணியாளர்கள் மின்விநியோகத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.