மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய பதற்றமான சூழலால் தடைப்பட்டிருந்த வான்வழிப் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் சார்ஜா ஆகிய நகரங்களுக்கான தனது தினசரி விமானச் சேவைகளை கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) இன்று வியாழக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
டோஹாவிலிருந்து துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) மற்றும் சார்ஜா சர்வதேச விமான நிலையம் (SHJ) ஆகியவற்றுக்கான தினசரி சேவைகள் இன்று வியாழக்கிழமை முதல் மீளாரம்பிக்கப்பட்டுள்ளன.
மே 1 முதல் டமாஸ்கஸுக்கான விமானச் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஜூன் மாத நடுப்பகுதியில் தனது வலையமைப்பை 150-க்கும் மேற்பட்ட சர்வதேச இலக்குகளுக்கு விரிவுபடுத்த கத்தார் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளது.
சமீபத்திய இடையூறுகளால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு விமான நிறுவனம் பின்வரும் சலுகைகளை வழங்குகிறது:
பெப்ரவரி 28 முதல் செப்டம்பர் 15 வரை முன்பதிவு செய்த பயணிகள், அக்டோபர் 31 வரை எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி பயணத் திகதியை மாற்றிக்கொள்ளலாம்.
பயன்படுத்தப்படாத டிக்கெட்டுகளுக்கான பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம். இதற்கான நடைமுறைகளுக்கு சுமார் 28 வேலை நாட்கள் வரை எடுக்கலாம்.
பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை காரணங்களால் விமான அட்டவணைகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பயணிகள் தங்களது முன்பதிவு விபரங்களை அடிக்கடி சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், தொடர்புகொள்ள வேண்டிய விபரங்கள் (Contact information) சரியாக இருப்பதை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மக்களுக்கு, டோஹா ஊடாக சர்வதேச நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கான ஒரு முக்கிய போக்குவரத்து இணைப்பு மீண்டும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.