முறையற்ற உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதால், கணவன் தன்னுடைய மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் வெலிஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை குறித்த பெண் உறங்கிக்கொண்டிருந்த போது, படுக்கையிலேயே வைத்து இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக, வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில், வெலிஓயா யூ.டி.கே பகுதியில் வசிக்கும் ஒரு குழந்தையின் தாயான 27 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண், வேலை நிமித்தம் வெளிநாடு சென்று 3 மாதங்களுக்கு முன்பு மீண்டும் நாட்டிற்கு திரும்பி, கண்டி கலஹா – புபுரெஸ்ஸ பகுதியில் உள்ள தன் கணவனின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

பின்னர், இரண்டு வாரங்களுக்கு முன்பு, அவர் தன் குழந்தையுடன் வெலிஓயா தோட்டத்தில் உள்ள தன் தாயின் வீட்டிற்குத் சென்றுள்ளார்.
மனைவி நீண்ட நாட்களாக வீட்டிற்கு திரும்பாததால், கணவன் நேற்று வியாழக்கிழமை மனைவியை திரும்ப அழைத்து செல்வதற்கு சென்றதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், குறித்த பெண் அப்பகுதியில் உள்ள ஒரு இளைஞனுடன் முறையற்ற உறவில் இருப்பதாக அப்பகுதி மக்கள் கணவனிடம் கூறியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த கணவன், இந்தத் தகாத உறவை நிறுத்துமாறு மனைவியிடம் கூறியதை தொடர்ந்து நேற்று மதியம் முதல் இருவரும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
பின்னர், இன்று காலை அவர் படுக்கையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

30 வயதான சந்தேக நபரையும், கொலைக்கு காரணம் என கருதப்படும் காதலனையும் வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்
சந்தேக நபர்கள், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.