காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல்களில் குறைந்தது இரண்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் பல பேர் காயமடைந்துள்ளனர்.
காசா நகரின் ஷேக் ரத்வான் (Sheikh Radwan) சுற்றுப்புறத்தில் உள்ள பஹ்லூல் சந்திப்புக்கு அருகில் நின்றிருந்த மக்கள் குழுவொன்றை இலக்கு வைத்து இஸ்ரேலிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததுடன், அங்கிருந்த மேலும் பலர் காயமடைந்தனர்.
தெற்கு காசா பகுதியின் கான் யூனிஸ் (Khan Younis) நகரின் கிழக்குப் பகுதிகள் மற்றும் காசா நகரின் கிழக்குப் பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய இராணுவம் பீரங்கித் தாக்குதல்களையும் முன்னெடுத்திருந்தது.
இரு தரப்புக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள போதிலும், இவ்வாறான தொடர்ச்சியான தாக்குதல்கள் அந்த ஒப்பந்தத்தின் ஸ்திரத்தன்மை குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன.
தாக்குதலுக்குள்ளான பகுதிகளில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.