யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினராகத் தொடர்வதற்கான தகுதியைச் சவால் செய்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கான விவாதங்களை மீண்டும் ஆரம்பிப்பதை டிசம்பர் 16, வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதிலும், வழக்கை விசாரிக்க வேண்டிய நீதிபதிகள் குழாம் முறையாக அமைக்கப்படாததால் வாதங்களை மீண்டும் ஆரம்பிக்க முடியவில்லை.
அத்துடன், அர்ச்சுனா இராமநாதனுக்காகப் புதிதாக நியமிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் புதிய சட்ட ஆலோசகரை நியமிக்க விரும்புவதாகவும் நீதிமன்றத்தில் அறிவித்தார்.
இதன்படி, நீதிபதிகளான மாயாதுன்னே கொரேயா மற்றும் மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், டிசம்பர் 16ஆம் திகதி வழக்கினை விவாதத்திற்கு மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் அர்ச்சுனா இராமநாதனைப் பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணி சேனானி தயாரத்னே இனிமேல் அவருக்காக நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டார்.
மனுதாரர் ஓஷல ஹேரத் சார்பில் சட்டத்தரணிகளான என்.கே. அசோக் பரன் மற்றும் ஷெனல் பெர்னாண்டோ ஆகியோர் ஆஜராகினர்.
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைச் சமர்ப்பித்தபோது, அர்ச்சுனா இராமநாதன் அரசாங்க மருத்துவ அதிகாரியாகப் பதவி வகித்ததாகக் கூறப்படும் விடயத்தை அடிப்படையாகக் கொண்டு, அவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகுதியைக் கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்து ஓஷல ஹேரத் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அரசாங்கப் பதவியில் இருக்கும் பொது அதிகாரிகள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுவதைக் கட்டுப்படுத்தும் அரசியலமைப்பு விதிகளின்படி, அர்ச்சுனா தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்பதே மனுதாரரின் வாதமாகும்.
எனினும், அரசாங்க மருத்துவப் பதவியிலிருந்து சம்பளமின்றி இடைநிறுத்தப்பட்டிருந்ததால், தேர்தல் தகுதிநீக்க விதிகளின் நோக்கில் தம்மைப் பொது அதிகாரியாகக் கருத முடியாது என அர்ச்சுனா தரப்புச் சட்டத்தரணிகள் முன்னர் வாதிட்டிருந்தனர்.
வழக்கு டிசம்பர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், நீதிமன்றம் வேறு உத்தரவு பிறப்பிக்காத வரை, வழக்கு நிலுவையில் இருக்கும் காலப்பகுதியில் அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து செயற்பட முடியும்.










