மண்டபம் அடுத்த சீனியப்பா தர்கா தெற்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்குப் படகில் கடத்துவதற்காக, வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 3 கோடி ரூபா மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதி இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால், சமீபகாலமாக தனுஷ்கோடி கடல் வழியாக மண்டபம், வேதாளை, சீனியப்பா தர்கா, களிமண்குண்டு, திருப்புல்லாணி மற்றும் பாம்பன் குந்துகால் உள்ளிட்ட கடற்கரைகளில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகப் படகுகள் மூலம் கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள், உரம், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சமையல் மஞ்சள் மூட்டைகள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சீனியப்பன் தர்கா கடற்கரையில் இருந்து இலங்கைக்குப் படகில் பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், ‘ஹோவர்கிராப்ட்’ ரோந்து கப்பல் மூலம் மண்டபம், வேதாளை, சீனியப்பன் தர்கா ஆகிய கடற்கரையோரப் பகுதிகளில் வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வாகனத்தில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் படகில் சில பெட்டிகளை ஏற்றுவதைக் கண்ட கடலோர காவல் படையினர், அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றனர்.
அந்தச் சமயத்தில், படகில் இருந்த இருவர் படகுடன் கடலுக்குள் தப்பிச் சென்றனர். அதேநேரம், சரக்கு வாகனத்தில் இருந்தவர்கள் பெட்டிகளைக் கடற்கரையில் வீசிவிட்டு வாகனத்துடன் தப்பியோடினர்.
இதையடுத்து, கடற்கரையோரம் கைவிடப்பட்டுக் கிடந்த 12 பெட்டிகளையும் மீட்ட கடலோர காவல் படை வீரர்கள், அவற்றை மண்டபத்தில் உள்ள தங்களது முகாமிற்கு எடுத்துச் சென்று சோதனை செய்தனர்.
அதில், சுமார் 3 கோடி ரூபா மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த வகையான வலி நிவாரணி மாத்திரைகள், இலங்கையில் கொக்கைன், ஹெராயின் மற்றும் மெத்தாம்பேட்டமைன் போன்ற போதைப்பொருட்களுடன் கலந்து பயன்படுத்தப்படுவதால், தமிழகத்தில் இருந்து இவை அதிகளவில் இலங்கைக்குக் கடத்தப்பட்டு வருகின்றன.
பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளை மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்த கடலோர காவல் படையினர், தப்பியோடிய மர்ம நபர்கள் மற்றும் சரக்கு வாகனம் குறித்து மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும (மரைன்) பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.