மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவில், வீடு ஒன்றின் குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
ஏறாவூர் 5 பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா (வயது 11) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமியின் தாயார் வெளிநாடு ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருக்கும் நிலையில், சிறுமி தனது தந்தையுடன் வசிந்து வந்துள்ளார். சம்பவ தினமான நேற்று தந்தை வெளியே சென்றிருந்த வேளை சிறுமியும் அவரது சகோதரனும் வீட்டில் இருந்தனர்.
வெளியே சென்றிருந்த தந்தை, மாலை 5.30 மணியளவில் வீட்டிற்கு வந்த போது, வீட்டில் அவரது மகன் மாத்திரம் இருப்பதை கண்டுள்ளார். உடனே மகளை வீடு முழுவதும் தேடிய போது, குளியலறையில் சுமார் இரண்டரை அடி உயரமுள்ள பேசின் ஒன்றில் சிறுமி விழுந்து கிடப்பதை கண்டு அவரை மீட்டு ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார் தந்தை.
எனினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.