மேற்கு வங்க மாநில சட்டசபைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஜார்கிராம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குள் காட்டு யானை புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்கத்தில் மொத்தம் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக இன்று 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.
முதற்கட்டத் தேர்தலில் சுமார் 3.60 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களுக்காக மாநிலம் முழுவதும் 44,378 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய சுமார் 2.5 லட்சம் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜார்கிராம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அருகிலிருந்த காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று வாக்குச்சாவடி வளாகத்திற்குள் நுழைந்தது.
யானையைக் கண்டதும் வரிசையில் நின்ற வாக்காளர்கள் அச்சமடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அந்த மையத்தில் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.
நிலைமை சீரானதைத் தொடர்ந்து, மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.