அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ட்ராக்டர் சந்திக்கு அருகில், டிப்பர் வாகனமொன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
புத்தங்கல பகுதியிலிருந்து ஹோல்மன்கல நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், பாலிகா சுற்றுவட்டம் பகுதியிலிருந்து அம்பாறை பொது வைத்தியசாலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதி, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியின் பின்னால் இருந்து பயணித்த மூவரில், தாயும் 3 வயது குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டிப்பர் வாகன சாரதி வழிவிடும் விதியை மீறியதால், பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி டிப்பர் மீது மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்றவுடன், டிப்பர் வாகன சாரதி வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் சென்று, டிப்பர் வாகனத்துடன் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இவ்வாறு சரணடைந்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியான, அம்பாறை நவகம்புர பகுதியை சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான கிருஷாந் சனக (வயது 34) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முச்சக்கரவண்டியின் பின்னால் இருந்த பயணித்த மூவர் கொண்ட குடும்பத்தினரில், கணவரான துலஞ்சன இமேஷ் என்பவர் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், இரவு 10.30 மணியளவில் உயிரிழந்தார்.

அவரது மனைவியான சுதேஷ் மஹின்சாவும், அவரது மூன்று வயது மகள் ஹசரி லியாராவும் அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், டிப்பர் சாரதி மதுபோதையில் இருந்ததாகவும், அவரது கவனக்குறைவாலேயே இரண்டு உயிர்கள் பறிபோயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில், அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் பணிப்புரைக்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி நெறிப்படுத்தலில், அம்பாறை பிரிவு 2-இன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பண்டார திசநாயக்க மேற்பார்வையின் கீழ், அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பிரதம பொறுப்பதிகாரி ஜி.உதய குமார உள்ளிட்ட போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
