மருத்துவக் கனவை நனவாக்க 71 வயதில் நீட் பரீட்சை எழுதிய முதியவர் ஒருவர் குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த 71 வயதான அசோக் பாஹர் என்பவரே இவ்வாறு நீட் பரீட்சை எழுதியுள்ளார்.
இவரது தந்தை லக்னோவில் புகழ்பெற்ற மருத்துவராக இருந்தவர். இவரது மனைவி மஞ்சு பாஹர் ஒரு மகப்பேறு மருத்துவர் ஆவார்.
அசோக் பாஹரின் குடும்பத்தில் மற்றும் உறவினர்கள் மத்தியில் சுமார் 20 பேர் மருத்துவர்களாகப் பணிபுரிகின்றனர்.
அசோக் பாஹரை ஒரு மருத்துவராகப் பார்க்க வேண்டும் என்பது அவரது தாயாரின் விருப்பமாக இருந்துள்ளது. எனினும், இளமைக் காலத்தில் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுகளில் அவரால் சித்தியடைய முடியவில்லை.
இதன் காரணமாக அவர் இந்திய மருந்துகள் நிறுவனத்தில் விரிவாக்கல் பிரிவின் தலைவராகவும், வெளியுறவுத் துறையில் ஆலோசகராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
இருப்பினும், தனது நீண்டகாலக் கனவை நிறைவேற்றத் தீர்மானித்த அவர், இந்த வயதில் நீட் பரீட்சை எழுதியுள்ளார். இவர் எதிர்காலத்தில் கல்லீரல் நோய் நிபுணராக வேண்டும் என்பதே தனது இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.
71 வயதில் இவர் எடுத்துள்ள இந்த முயற்சி சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. பலர் அவரது விடாமுயற்சியைப் பாராட்டி ஊக்கமளித்து வரும் அதேவேளை, சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வயதில் மருத்துவம் படிப்பது காலம் கடந்த செயல்” என்றும், “தகுதியுள்ள ஒரு இளம் மாணவரின் மருத்துவ ஆசன வாய்ப்பை இது பறிப்பதைப் போன்றது” என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.