தவெக அமைச்சரவை பதவியேற்புக்கு முன்பு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்னும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் இருக்கிறது
“தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில், தெளிவான தீர்ப்பை வழங்கவில்லை.
எனினும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 உறுப்பினர்களை வழங்கி, அதனை தனிப் பெரும் முதன்மை எண்ணிக்கை கொண்ட கட்சியாக தேர்வு செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில் தவெக தலைவர் சி.ஜோசப் விஜய், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரியுள்ளார். பதவி ஏற்புக்கு முன்பு தவெக, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல..