விமான நிலையத்தையே வீடாக மாற்றி வாழ்ந்து வந்த நபர் மரணம்

ஈரானின் மாகாணமான குசெஸ்தானில் 1945ஆம் ஆண்டு பிறந்தவர் மெஹ்ரான் கரிமி நாசேரி. அன்றைய பிரிட்டன் சாம்ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டில் ஈரான் இருந்த நிலையில், ஈரானிய தந்தைக்கும், பிரிட்டானிய தாய்க்கும் இவர் பிறந்துள்ளார். இந்நிலையில், தாய் இல்லாமல் தந்தையால் வளர்க்கப்பட்ட நாசேரி, 1974ஆம் ஆண்டு மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றுள்ளார். மீண்டும் ஈரான் திரும்பிய அவர், அந்நாட்டின் அரசுக்கு எதிராக போராடியதால் பாஸ்போர்ட் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், தனது தாயை தேடி ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரிட்டன், நெதர்லாந்து, ஜெர்மனி என சுற்று திரிந்தார் நாசேரி. ஆனால், கடவுச்சீட்டு, குடியேற்ற ஆவணங்கள் இல்லாததால், எந்த நாடும் இவரை தங்க வைக்கவில்லை.பல நாடுகளில் அகதியாக தங்க அவர் விண்ணப்பம் போட்டார். பெல்ஜியம் அவருக்கு குடியுரிமை வழங்க முன்வந்தது. அப்போது அவர் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் இருந்தார். தான் அகதி என்ற ஆவணங்களை வைத்திருந்த பெட்டியை தொலைத்துவிட்டார்.இதனால் பெல்ஜியம் குடியுரிமையை நாசேரி பெற முடியவில்லை. தொடர்ந்து ஆவணங்கள் இல்லாததால் பிரான்ஸ் நாட்டு காவல்துறை கைது செய்து பின்னர் விடுவித்தது.

ஒரே கட்டத்தில் அவர் தனது முயற்சிகளை கைவிட்டு, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகர விமான நிலையத்தில் ஒரு பகுதியில் பெட்டிப் படுக்கையை வைத்துக்கொண்டு தனது வீடாக மாற்றிக்கொண்டார். பின்னர், சுமார் 18 ஆண்டுகாலம் இவர் பாரிஸ் நகரின் சார்லெஸ் டி கல்லே விமான நிலையத்தில் தொடர்ந்து தங்கி வாழ்ந்து வந்தார். இவரின் சுவாரசியமான வாழ்க்கை பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல்பெர்க்கிற்கு பிடித்து போக, தி டெர்மினல் என்ற பெயரில் இவர் வாழ்க்கையை படமாக்கினார்.

இந்த படத்திற்குப் பின்னர் பிரபலமனார் நாசேரி.2006ஆம் ஆண்டு வரை விமான நிலையத்திலேயே தங்கி இருந்த அவர் பின்னர் ஹோட்டல்களில் தங்கி வாழ்ந்தார். சில வாரங்களுக்கு முன்னர் மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்பி தங்க ஆரம்பித்த இவர், உடல் நலக்குறைவால் சார்லெஸ் டி கல்லே விமான நிலையத்தின் டெர்மினல் 2F பகுதியில் உயிரிழந்தார்.