கொழும்பு – கெஸ்பேவ பகுதியில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றின் விடுதியில் தங்கியிருந்த 11 வயது மாணவனை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பாடசாலை அதிபர், 17 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், 2 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த சந்தேகநபர் 2019ஆம் ஆண்டிலும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டொன்றில் சிக்கியிருந்ததாகவும், பின்னர் செய்தித்தாள் விளம்பரங்கள் மூலம் தனது பெயரை மாற்றிக்கொண்டதாகவும் விசாரணையாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், முந்தைய கைது தொடர்பில் வழக்குத் தொடரப்பட்டதா, தண்டனை விதிக்கப்பட்டதா அல்லது அவர் விடுவிக்கப்பட்டாரா என்பது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.
கடந்த செப்டெம்பர் 17ஆம் திகதி இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை அதிபரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுவனின் கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக, மற்றொரு மாணவனின் தந்தை சிறுவனின் தந்தைக்குத் தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து பாடசாலைக்குச் சென்ற தந்தை, தனது மகனை அழைத்துச் சென்று மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
மருத்துவப் பரிசோதனையின்போது, பிரம்பால் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் மற்றும் சிறுவனின் கைகள், முன்கைகளில் வீக்கம் உள்ளிட்ட காயங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய குணமடைந்த காயங்களையும் சட்ட வைத்திய அதிகாரி பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
செப்டெம்பர் 18ஆம் திகதி வைத்தியசாலை பொலிஸ் பிரிவினர் சிறுவனிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இதன்போது, இரவு நேரங்களில் பாடசாலை வளாகத்தின் தனிமையான பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அதிபர் தன்னைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகச் சிறுவன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கெஸ்பேவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பாடசாலையின் அதிபர், பணிப்பாளர், விடுதி பொறுப்பாளர் மற்றும் விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பாடசாலையின் விடுதியில் தங்கியிருந்த சுமார் பத்து சிறுவர்களில் மூவரிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. வாக்குமூலம் வழங்கும்போது அவர்கள் அச்சமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அந்த வாக்குமூலங்களின் உள்ளடக்கங்கள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், ஏனைய சிறுவர்கள் எவரும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இதேவேளை, சம்பவங்களுக்குப் பின்னர் தனது மகனைப் பாடசாலையிலிருந்து விலக்கிக்கொள்ளத் தாயார் முயன்றபோது, அதற்கு சந்தேகநபர் ஆரம்பத்தில் அனுமதி மறுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் உதவியையும் நீதிமன்றத்தின் தலையீட்டையும் நாடிய பின்னரே சிறுவனுக்கான பாடசாலை விலகல் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடிந்ததாகக் கூறப்படுகிறது.
கெஸ்பேவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் அறிவுறுத்தலின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சிறுவர் மற்றும் மகளிர் பணியகப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோரும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவனின் முறைப்பாடு, மருத்துவ அறிக்கைகள், ஏனைய மாணவர்களின் வாக்குமூலங்கள் மற்றும் சந்தேகநபர் தொடர்பான முந்தைய முறைப்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளன.
வழக்கு எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.










