ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சு இதுவரை எந்தவிதமான உத்தியோகபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ஷம்மி சில்வா தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
“இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சு என்ற ரீதியில் நாங்கள் இன்னும் எந்த உத்தியோகபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. இவை சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் மாத்திரமே” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அமைச்சினால் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
“நாங்கள் ஒரு ஊடக சந்திப்பை நடத்த எதிர்பார்த்துள்ளோம், அதன் மூலம் உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்படும். அதன் பின்னர் இது குறித்து விரிவாகப் பேச முடியும்” என அவர் கூறினார்.