வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் (RDA) மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் குறைத்து மதிப்பிட முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
தி அபிவிருத்தி அதிகார சபையின் இரட்டை கொடுப்பனவுகள் குறித்த குற்றச்சாட்டுகள் “அடிப்படையற்றவை” என பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்த கருத்திற்குப் பதிலளிக்கும் வகையிலேயே நாமல் ராஜபக்ச தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அவர் தனது பதிவில் “அமைப்பில் ஏற்பட்ட பிழை” (System Error) காரணமாக ஒப்பந்தக்காரர்களுக்கு 263 மில்லியன் ரூபா தவறுதலாக அனுப்பப்பட்டதை இலங்கை வங்கியின் (BOC) நிதித் திரும்பப் பெறும் அறிவித்தல் (Recall of Funds notice) உறுதிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு தவறுதலாக அனுப்பப்பட்ட தொகையில் 51 மில்லியன் ரூபாவிற்கும் அதிகப்படியான தொகை இன்னும் கணக்கில் காட்டப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உத்தியோகபூர்வ ஆவணங்கள் உண்மையை உணர்த்தும் போது, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இதனை எதன் அடிப்படையில் மறுக்கிறார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தகுந்த ஆதாரங்கள் இருக்கும் போது, அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த மறுப்பை எவ்வாறு நியாயப்படுத்துகிறார் என்றும் நாமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், கடந்த காலங்களில் பேசப்பட்ட “திறைசேரி மின்னஞ்சல் மோசடி” போன்ற விவகாரங்களையும் இதனுடன் தொடர்புபடுத்திய அவர், அரசாங்கம் உண்மைகளை மறைக்காமல் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.