வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் கூறி, முழுமையாக நிர்மாணப் பணிகளை நிறைவு செய்யாமல் 3.87 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நிறுவனப் பணிப்பாளர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்தி, வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகப் பலரிடம் பணத்தைப் பெற்றுள்ளனர். எனினும், ஒப்புக்கொண்டபடி நிர்மாணப் பணிகளை முழுமையாக நிறைவு செய்யாமல், பகுதியளவிலான பணிகளை மட்டுமே மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடித் திட்டத்தின் மூலம் சந்தேகநபர்கள் மொத்தமாக 38,770,000 ரூபாவைப் பெற்றுள்ளதாகவும், இது நம்பிக்கை மோசடி குற்றமாகக் கருதப்படுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, நேற்று செவ்வாய்க்கிழமை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பூகொட பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரும், தொம்பே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் நிதி மற்றும் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










