சர்ச்சைக்குரிய ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நிரந்தர மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பாக நாமல் ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை நாமல் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
சர்ச்சைக்குரிய ஏர்பஸ் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய பணமோசடி மற்றும் 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக, பிரதம நீதியரசரின் அனுமதியுடன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, குற்றப்பத்திரிகையில் 24 குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், 59 சாட்சிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.










