மோசடிக்காரர்களிடமிருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்கத் தவறியதற்காக HSBC வங்கி 35 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் (சுமார் 24.6 மில்லியன் அமெரிக்க டொலர்) அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.
வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதில் பரவலான மற்றும் அமைப்புசார்ந்த குறைபாடுகள் காணப்பட்டதாக குற்றம் சாட்டி, 2024 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் (ASIC) HSBC-க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருந்தது.
வங்கி தனது உள்நாட்டு கண்காணிப்பு முறைகளில் போதிய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இல்லாததையும், வாடிக்கையாளர் முறைப்பாடுகளுக்கு உரிய காலத்தில் பதிலளிக்கத் தவறியதையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த விவகாரம் உலகளவில் அரிதாகக் காணப்படும் வழக்குகளில் ஒன்றாகும் என்றும், வாடிக்கையாளர்களை மோசடிகளில் இருந்து பாதுகாப்பது வங்கிகளின் அடிப்படை பொறுப்பு என்பதை இது தெளிவாக எடுத்துக்காட்டுவதாக ASIC தலைவர் சாரா கோர்ட் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 28 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் இழப்பீடு மற்றும் பணத்தைத் திருப்பிச் செலுத்தியுள்ளதாக HSBC தெரிவித்துள்ளது.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் HSBC பெயரில் போலியான குறுஞ்செய்திகள் அனுப்பி வங்கித் தகவல்களைப் பெறும் மோசடிகள் அதிகரித்ததன் காரணமாக, அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் குறித்த முறைப்பாடுகள் 380 சதவீதம் உயர்ந்துள்ளதாக ASIC குறிப்பிட்டுள்ளது.
இந்த மோசடிகளால் பல வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புப் பணத்தை இழந்ததுடன், கடன் தவணைகளைச் செலுத்த கூடுதல் கடன்களைப் பெற வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.