இலங்கையில் அதிகரித்து வரும் யானை – மனித மோதல்களைக் கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை வலியுறுத்தியுள்ளது.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் கே. பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த நீதியரசர் அபேசூரிய யானைகள் நாட்டின் தேசியச் சொத்து மற்றும் பொதுச் சொத்து எனவே அவை பாதுகாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சட்டவிரோத மின்சார வேலிகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இந்த மோதல்களைக் குறைக்க வனவிலங்கு பாதுகாப்புத் துறை தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
யானைகள் மற்றும் தந்தங்களைக் கொண்ட யானைகளைப் பாதுகாப்பதற்கான சங்கத்தின் தலைவி கே.பிரியதர்ஷனி இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கல்பனீ திஸாநாயக்க, சட்டவிரோத மின்சார வேலிகளில் பயன்படுத்தப்பட வேண்டிய அனுமதிக்கப்பட்ட மின்னழுத்தம் (Voltage) குறித்துத் தெளிவான வரையறைகள் இல்லை என்பதையும், இது தொடர்பான முக்கிய கவலைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதையும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிமன்றம், அடுத்த விசாரணைத் தேதியில் வனவிலங்கு பாதுகாப்புப் பணிப்பாளர் நாயகம் அல்லது ஒரு சிரேஷ்ட பிரதிநிதி நேரில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிட்டது.
அங்கீகரிக்கப்படாத மின்சார வேலிகளை ஒழுங்குபடுத்துவது உட்பட, யானை – மனித மோதல்களைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் விளக்கமளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 2-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.