“மங்கிபாக்ஸ்” வைரஸ் பரவும் அபாயம் : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

-ச.சந்திரபிரகாஷ்-

உலக நாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பெருந்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது மங்கிபாக்ஸ் வைரஸ் தொற்று நோய் உலகம் முழுவதும் பரவிவருதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு முதல் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா விஞ்ஞானிகள் இந்த புதிய தொற்று பரவலை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த துரித முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெர்மனி வெள்ளிக்கிழமை தனது முதல் வைரஸ் பாதிப்பை பதிவு செய்தது, பிரித்தானியா, ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளும் தொற்றைக் கண்டறிந்த சமீபத்திய ஐரோப்பிய நாடாக மாறியுள்ளன.

கடந்த 10 நாள்களில் 12 நாடுகளில் 90க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த மங்கிபாக்ஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை இந்த தொற்று பாலியல் உறவுகளிலும் குறிப்பாக ஆணுடன் ஆண் பாலியல் உறவு கொள்ளும் (ஓரிணசேர்கை) நபர்களிடம் அதிகம் காணப்படுவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடலில் நீர்க்கட்டி தடிப்புக்கள் , புண்கள் மற்றும் சொறி காய்ச்சல் என்பன ஆரம்ப அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளன. பொதுவாக 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும்.  இறப்பு விகிதம் சுமார் 3-6 ஆக உள்ளது.

மே 7 ஆம் திகதி முதன்முதலில் அடையாளம் காணப்பட்டதில் இருந்து பிரித்தானியாவில் தொற்றுக்கள் இரட்டிப்பாகியுள்ளன. இங்கு தற்போது 20 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள் உள்ள நிலையில் இன்னும் பல கண்டறியப்படாமல் இருக்கலாம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குரங்கு பாக்ஸ் என்பது வைரஸால் ஏற்படும் ஒரு அரிய நோயாகும், இது பெரியம்மை போன்ற அதே குடும்பத்தின் ஒரு பகுதியாகும், இது பொதுவாக குறைவான தீவிரத்தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் , உலக நாடுகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்கா பகுதிகளில் இந்த வைரஸ் முதன்முதலில் குரங்குகளில் 1958 இல் கண்டறியப்பட்டது.

இந்த வைரஸின் மனித தொற்று 1970 இல் பதிவு செய்யப்பட்டது.