அதிக விலைக்கு அரிசி மற்றும் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த பல வர்த்தக நிலையங்களை முற்றுகையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 24 ஆம் திகதி கண்டி, திருகோணமலை, காலி, தங்காலை, கிராந்துருகோட்டை மற்றும் ஹப்புத்தளை ஆகிய பகுதிகளில் இந்த திடீர் முற்றுகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் போது, கீரி சம்பா உள்ளிட்ட ஏனைய அரிசி வகைகளை அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை கண்டறியப்பட்டது.
இந்த சட்ட மீறல்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதைத் தொடர்ந்து, திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த ஒரு வர்த்தகருக்கும், காலி மற்றும் தங்காலை பகுதிகளைச் சேர்ந்த தலா இரு வர்த்தகர்களுக்கும், கிராந்துருகோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு வர்த்தகருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், ஹப்புத்தளை பகுதியில் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதேவேளை, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராகவும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, அதிக விலைக்கு குடிநீர் விற்பனை செய்த ஹப்புத்தளை பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு 10 இலட்சம் ரூபா அபராதமும், அனுராதபுரம் பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதமும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை கண்டறிய இவ்வாறான சோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.