டேட்டிங் செயலிகள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக அறிமுகமாகும் அந்நியர்களுடன் உறவுகளை ஏற்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போலியான கையடக்கத் தொலைபேசி செயலிகளைப் பயன்படுத்தி நிதி மோசடிகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
அண்மைக்காலமாக, டேட்டிங் செயலிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுடன் நட்பையோ காதல் உறவையோ ஏற்படுத்தும் மோசடிக்காரர்கள் தொடர்பான பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவர்கள் குறுகிய அல்லது நீண்ட காலத்திற்கு கவர்ச்சிகரமான செய்திகளை அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெற்று பின்னர் அவர்களை ஏமாற்றுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மற்றும் செய்திப் பரிமாற்றத் தளங்கள் ஊடாகவும் மோசடிக்காரர்கள் நபர்களை அணுகுகின்றனர்.
இவர்கள் இணையவழி பாலியல் சேவைகளை வழங்குவதாகவோ அல்லது தனிப்பட்ட உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பளிப்பதாகவோ கூறி, குறிப்பிட்ட கையடக்கத் தொலைபேசி செயலிகளைப் பதிவிறக்கி நிறுவுமாறு பாதிக்கப்பட்டவர்களைத் தூண்டுகின்றனர்.
இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகள் டேட்டிங் செயலிகளைப் போன்று தோற்றமளித்தாலும், அவை கையடக்கத் தொலைபேசிகளுக்குள் ஊடுருவி, இணையவழி வங்கிச் சேவைகளுக்கான உள்நுழைவுத் தகவல்களைத் திருடும் நோக்கில் உருவாக்கப்பட்ட தீங்கிழைக்கும் APK கோப்புகளாக இருக்கலாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இத்தகைய செயலிகள் கையடக்கத் தொலைபேசிகளில் நிறுவப்பட்டிருக்கும் நிலையில், இணையவழிப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, பயனர்களின் வங்கிக் கணக்குகளுடன் தொடர்புடைய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொற்களை மோசடிக்காரர்கள் பெற்றுக்கொள்ளக்கூடும்.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து சட்டவிரோதமாகப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் அபாயம் காணப்படுவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சமூக ஊடகங்கள் மற்றும் செய்திப் பரிமாற்றத் தளங்கள் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபடும் முறைகள் வேகமாக மாற்றமடைந்து வருவதாகவும், காதல் மற்றும் துணை உறவுகள் தொடர்பான வாக்குறுதிகளைப் பயன்படுத்தி சிலர் பொதுமக்களை ஏமாற்றி அவர்களின் நிதித் தகவல்களைப் பெற்றுக்கொள்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, அறியப்படாத மூலங்களிலிருந்து கையடக்கத் தொலைபேசி செயலிகளைப் பதிவிறக்குவதைத் தவிர்க்குமாறும், வங்கித் தகவல்கள், ஒருமுறைப் பயன்படுத்தும் கடவுச்சொற்கள் (OTP), கடவுச்சொற்கள் மற்றும் ஏனைய தனிப்பட்ட தகவல்களை அந்நியர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அறிமுகமில்லாத நபர்களுடன் தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது காணொளிகளைப் பகிர்ந்துகொள்வதையும் தவிர்க்குமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இணையவழி உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளும்போது நன்கு சிந்தித்து முடிவுகளை எடுப்பது தனிப்பட்ட பாதுகாப்பையும் நிதிப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு அவசியமானது என வலியுறுத்தியுள்ள பொலிஸார், இணையச் சூழலில் அந்நியர்களுடன் தொடர்புகொள்ளும்போது மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.










