இலங்கையின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மீட்கப்படும் தாயை இழந்த மற்றும் காயமடைந்த யானைக் குட்டிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக, பொலன்னறுவைக்கு அருகிலுள்ள களஹகலையில் 15 ஹெக்டேயர் நிலப்பரப்பில் புதிய யானைகள் இடைநிலைப் பராமரிப்பு நிலையமொன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நிபுணர் குழுவொன்று மேற்கொண்ட ஆய்வின் பின்னர் இந்த இடம் தெரிவு செய்யப்பட்டதாகவும், இதற்கான காணியை ஒதுக்குவதற்கு வனத் திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பொலன்னறுவை மாவட்டச் செயலாளர் சுஜந்த ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது மீட்கப்படும் யானைக் குட்டிகளை சிகிச்சைக்காக உடவளவை யானைகள் இடைநிலைப் பராமரிப்பு நிலையத்துக்குக் கொண்டு செல்ல ஏழு முதல் ஒன்பது மணித்தியாலங்கள் வரை தேவைப்படுகின்றது. புதிய நிலையம் அமைக்கப்படுவதன் மூலம் இந்தப் பயண நேரத்தை சுமார் ஒன்று முதல் இரண்டு மணித்தியாலங்களாகக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், யானைக் குட்டிகளுக்கு விரைவாகச் சிகிச்சையளிக்கவும் வாய்ப்புக் கிடைக்கும்.
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும் யானைகள் தொடர்பான ஆய்வாளருமான கலாநிதி சுமித் பிலபிட்டிய கருத்துத் தெரிவிக்கையில், புதிய நிலையத்தின் ஊடாக யானைக் குட்டிகளைப் பராமரித்து, அவற்றின் பிராந்தியங்களுக்கு உட்பட்ட வனவிலங்கு சரணாலயங்களில் மீண்டும் விடுவிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் காணப்படும் யானைகளின் மூன்று முக்கிய உட்பிரிவுகளும் இயற்கையாகத் தனித்தனியாக வாழும் நிலையைப் பேணுவதற்கும் இந்தத் திட்டம் உதவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்தப் புதிய நிலையத்தின் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதுடன், அப்பகுதி மக்களுக்குத் தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.










