தெற்காசிய நாடுகளில் தரவுகள் கிடைக்கப்பெற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை 2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பசி குறியீட்டில் (Global Hunger Index – GHI) மிகக் குறைந்த புள்ளிகளைப் பதிவு செய்துள்ளது.
இது கடந்த இரண்டு தசாப்தங்களில் இலங்கையின் பசி நிலைமையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை எடுத்துக்காட்டுகிறது.
ஒக்டோபர் 14ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இலங்கை 10.2 புள்ளிகளைப் பெற்று, உலகளவில் மதிப்பீடு செய்யப்பட்ட 122 நாடுகளில் 53ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
தெற்காசிய நாடுகளின் பசி குறியீட்டுப் புள்ளிவிபரங்களின்படி, இலங்கைக்கு அடுத்ததாக நேபாளம் 14.5 புள்ளிகளையும், பங்களாதேஷ் 19.2 புள்ளிகளையும், இந்தியா 24.1 புள்ளிகளையும், பாகிஸ்தான் 25.5 புள்ளிகளையும், ஆப்கானிஸ்தான் 28.6 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
போதிய தரவுகள் இல்லாத காரணத்தினால் பூட்டான் மற்றும் மாலைதீவுகளுக்கு இந்த அறிக்கையில் புள்ளிகள் வழங்கப்படவில்லை.
இலங்கையின் பசி குறியீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையின் உலகளாவிய பசி குறியீட்டுப் புள்ளிகள் கடந்த இரண்டு தசாப்தங்களில் பின்வருமாறு மாற்றமடைந்துள்ளன.
- 2000ஆம் ஆண்டு – 22.1 புள்ளிகள்
- 2006ஆம் ஆண்டு – 19.9 புள்ளிகள்
- 2012ஆம் ஆண்டு – 20.8 புள்ளிகள்
- 2018ஆம் ஆண்டு – 11.4 புள்ளிகள்
- 2026ஆம் ஆண்டு – 10.2 புள்ளிகள்
புள்ளிகள் குறைவது பசி நிலைமை குறைந்துள்ளதைக் குறிக்கிறது. இருப்பினும், இலங்கை தொடர்ந்தும் மிதமான பசி நிலை (Moderate Hunger) பிரிவிலேயே காணப்படுவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதன் மூலம் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான சவால்கள் இன்னமும் நீடிப்பது தெரியவருகிறது.
சிறுவர்களின் ஊட்டச்சத்து நிலை
அறிக்கையின்படி, இலங்கையின் ஊட்டச்சத்து நிலை தொடர்பான முக்கிய புள்ளிவிபரங்கள் வருமாறு:
- 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் வளர்ச்சி குன்றல்: 10.1 சதவீதம்
- 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் உயரத்திற்கேற்ற உடல் எடை இல்லாமை: 9.3 சதவீதம்
- ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் வாழும் மக்கள்: 4.9 சதவீதம்
- 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் இறப்பு விகிதம்: 0.6 சதவீதம்
உலகளாவிய பசி குறியீடு நான்கு முக்கிய காரணிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அவை ஊட்டச்சத்துக் குறைபாடு, சிறுவர்களின் வளர்ச்சி குன்றல், உயரத்திற்கேற்ற உடல் எடை இல்லாமை மற்றும் சிறுவர் இறப்பு விகிதம் ஆகியவையாகும்.
உலகளவில் மீண்டும் அதிகரிக்கும் பசி
உலகளாவிய ரீதியில், கடந்த இரண்டு தசாப்தங்களாக ஏற்பட்ட முன்னேற்றத்துக்குப் பின்னர் பசி நிலைமை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக 2026ஆம் ஆண்டுக்கான அறிக்கை எச்சரித்துள்ளது.
ஆயுத மோதல்கள், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் ஆகியவை உலகளவில் பசி அதிகரிப்பதற்கான முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இலங்கை தெற்காசியாவில் ஒப்பீட்டளவில் சிறந்த புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான சவால்களைத் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.










