இலங்கை கடற்படையும் கடலோரக் காவல் படையும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, மாத்தறை தலல்ல, நாவட்டுன்ன கடற்கரையில் 475 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை கடலோரக் காவல் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இன்று சனிக்கிழமை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்போது, போதைப்பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் பொருட்கள் அடங்கிய 10 சாக்குப் பைகள் மற்றும் 11 பயணப் பைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சிறிய படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பின்னர், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், 200 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும், 275 கிலோகிராம் ஹெரோயினும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களைப் பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, கடந்த ஒரு வருட காலப்பகுதியில் கடற்படையும் கடலோரக் காவல் படையும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம், சுமார் 97 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், முப்படைகள், பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் இணைந்து முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்களை 1818 அல்லது 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.










