இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்தடைந்தபோது கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் (TID) 72 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், சந்தேகநபர் நேற்று வியாழக்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் 2026 நவம்பர் 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய், மாசியப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய குறித்த நபர், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி இரவு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பை மீளமைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 2015ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இந்திய நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
சிறைத்தண்டனையை நிறைவு செய்ததைத் தொடர்ந்து அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இலங்கை வந்தடைந்ததும் கைது செய்யப்பட்ட அவர், மேலதிக விசாரணைகளுக்காக 72 மணிநேர தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.










