மோட்டார் வாகனங்களில் ஆபத்தான வகையில் மாற்றங்கள் செய்தல், அதிக ஒலி எழுப்பும் வகையில் சைலன்சர் மாற்றுதல் மற்றும் பல்வேறு சட்டவிரோத நவீன மாற்றங்களை மேற்கொள்ளும் வாகனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பொலிஸ் றிவித்துள்ளது.
சமீபத்தில் இடம்பெற்ற சாலை விபத்துகளை ஆய்வு செய்தபோது, குறிப்பாக முறையற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்ட பேருந்துகள் உரிய தகுதிச் சான்றுகள் இன்றி இயக்கப்படுவதால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அனுமதியற்ற வாகன மாற்றங்கள்,கூடுதல் உபகரணங்கள் பொருத்துதல்,
வாகனத்தின் வெளிப்புற தோற்றத்தை மாற்றுதல்,ஆபத்தான இரும்பு அமைப்புகள் பொருத்துதல் மேலும்,சைலன்சரின் அமைப்பை மாற்றி அதிக ஒலி வெளியிடுதல்,பல வண்ணங்களில் மின்னும் ‘ஸ்ட்ரோப் லைட்கள்’ மற்றும் சட்டவிரோத ஹார்ன்கள் பொருத்துதல்,
வாகனங்களின் நிறத்தை மாற்றுதல், ஓவியங்கள் மற்றும் பல்வேறு வடிவங்கள் ஒட்டுதல் போன்ற செயல்களும் சட்டவிரோதமானவை என பொலிஸார்; சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேபோல், சாலையில் பயணிக்கும் வாகனங்களில் இருந்து கருப்பு புகை வெளியேறுவது காணப்பட்டால், அதற்கான தகவல்களை — வாகன இலக்கம், இடம் மற்றும் திகதி உள்ளிட்ட விவரங்களுடன் — 070 350 0525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்புமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனச் சட்டத்தின் படி, பொதுமக்கள் அல்லது சொத்துகளுக்கு ஆபத்தாக அமையக்கூடிய நிலையில் உள்ள வாகனங்களை சாலையில் இயக்குவது சட்டவிரோதமாகும் என்றும் பொலிஸார்; நினைவூட்டியுள்ளனர்.
அனைத்து வாகன உரிமையாளர்களும் மற்றும் சாரதிகளும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த விசேட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் இலங்கை பொலிஸ் வலியுறுத்தியுள்ளது.