புதிய களனிப் பாலத்தையும் துறைமுக அணுகல் உயர்மட்ட அதிவேக நெடுஞ்சாலையையும் இணைக்கும் நிர்மாணப் பணிகள் காரணமாக, குறித்த பாலத்தின் சில நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் இன்று திங்கட்கிழமை முதல் டிசம்பர் 1ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) அறிவித்துள்ளது.
இதன்படி, எட்டு நாட்கள் முன்னெடுக்கப்படவுள்ள இந்த நடவடிக்கையின்போது, இங்குருகடை பரிமாற்று நிலையத்தின் (Ingurukade Interchange) நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் வெவ்வேறு காலப்பகுதிகளில் மூடப்படவுள்ளன.
இன்று இரவு 9 மணி முதல் நவம்பர் 25ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை குறித்த இரு பாதைகளும் மூடப்படும்.
நவம்பர் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை வெளியேறும் பாதை மாத்திரம் மூடப்படும்.
அதனைத் தொடர்ந்து, நவம்பர் 28ஆம் திகதி இரவு 9 மணி முதல் டிசம்பர் 1ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை மீண்டும் இரு பாதைகளும் மூடப்படவுள்ளன.
இதனால், கட்டுநாயக்க மற்றும் ஒருகொடவத்தையிலிருந்து கொழும்பு துறைமுகம் மற்றும் இங்குருகடை சந்தி நோக்கிப் பயணிக்கும் வாகனங்களும், துறைமுகம் மற்றும் இங்குருகடை சந்தியிலிருந்து கட்டுநாயக்க மற்றும் பொரளை நோக்கிப் பயணிக்கும் வாகனங்களும் பாதிக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கட்டுநாயக்க அல்லது கண்டியிலிருந்து கொழும்பு துறைமுகம் மற்றும் இங்குருகடை சந்தி நோக்கிப் பயணிக்கும் வாகன சாரதிகள் பேலியகொடை அல்லது ஒருகொடவத்தை வெளியேறும் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒருகொடவத்தையிலிருந்து கொழும்பு துறைமுகம் நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் புதிய களனிப் பாலத்தின் கீழ்மட்ட வீதியைப் பயன்படுத்த வேண்டும்.
அதேவேளை, கொழும்பு துறைமுகம் அல்லது இங்குருகடை சந்தியிலிருந்து கட்டுநாயக்க நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் புதிய களனிப் பாலத்தின் கீழ்மட்ட வீதியைப் பயன்படுத்தி, பேலியகொடை நுழைவாயில் ஊடாக அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு துறைமுகம் அல்லது இங்குருகடை சந்தியிலிருந்து பொரளை நோக்கிப் பயணிக்கும் வாகனங்களும் புதிய களனிப் பாலத்தின் கீழ்மட்ட வீதியைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
நிர்மாணப் பணிகள் இடம்பெறும் காலப்பகுதியில் சாரதிகள் அறிவிக்கப்பட்ட மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும், இதனால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.











