ஹிக்கடுவை, திரானகம கடற்கரையில் கடலில் நீராடியபோது கடல் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட 64 வயதுடைய ஜேர்மன் பெண் ஒருவரை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை, குறித்த பெண் கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட பலத்த கடல் நீரோட்டத்தில் சிக்கி கரையிலிருந்து தூரமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, கடற்கரையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் உடனடியாகச் செயற்பட்டு குறித்த பெண்ணை மீட்டுள்ளனர்.
இந்த மீட்பு நடவடிக்கையில் பொலிஸ் சார்ஜன்ட் திஸாநாயக்க (38508), பொலிஸ் கான்ஸ்டபிள் மிஹிந்து (83255) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் நிபுண் (98864) ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆரம்பக்கட்ட முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பாதுகாப்பாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.










