இலங்கைக்கான பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) நய்யார் நசீர் மற்றும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள பிரதிப் பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது பாதுகாப்பு ஒத்துழைப்பு, இராணுவப் பயிற்சி வாய்ப்புகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு உள்ளிட்ட விடயங்களில் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்தியுள்ளனர்.
காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய அனர்த்தங்களினால் ஏற்படும் பாதுகாப்பு சவால்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
தேசிய பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் அனர்த்த முகாமைத்துவத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை இரு தரப்பினரும் சுட்டிக்காட்டியதுடன், இயற்கை அனர்த்தங்களுக்கு தொழில்நுட்ப ரீதியான பதிலளிப்பு அவசியமென்றும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட எல்லை கடந்த கடல்சார் குற்றங்கள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இவ்வாறான அச்சுறுத்தல்களைத் திறம்பட எதிர்கொள்வதற்கு பலமான தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் பொறிமுறைகளின் அவசியத்தை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.
இலங்கையில் தனது இராஜதந்திரக் கடமைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகருக்குப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இதன்போது தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.