பம்பலப்பிட்டியிலுள்ள ஓஷன் டவர் கட்டிடத்தில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கியதாகக் கூறப்படும் விபச்சார விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் தாய்லாந்து நாட்டுப் பெண்கள் மூவர் உட்பட ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு தெற்கு பிராந்திய குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த ஜூன் 20 ஆம் திகதி குறித்த இடத்தில் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, அந்த நிலையத்தை நிர்வகித்ததாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரும், விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் மேலும் ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பம்பலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட உள்நாட்டு பெண்கள் 27, 35 மற்றும் 38 வயதுகளைக் கொண்டவர்கள் என்றும் அவர்கள் எல்லகாவ, கலவானை மற்றும் கல்கமுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பெண்கள் மூவரும் 34, 41 மற்றும் 43 வயதுகளைக் கொண்ட தாய்லாந்து நாட்டுப் பிரஜைகள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.