2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, 225,748 மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 11, 795 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A தர சித்தி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
7,419 மாணவர்கள் எந்தவொரு பாடத்திலும் சித்தியடையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானப் பாடத்தில் இந்தமுறை 70.1 சதவீத மாணவர்கள் சித்தியடைந்துள்ள நிலையில், கணிதப் பாடத்தில் 72.03 சதவீத மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
மாகாண அடிப்படையில் தென் மாகாணம் 75.56 சதவீதத்துடன் அதிகூடிய உயர்தரத் தகுதிப் பெறுபேற்றைப் பதிவு செய்துள்ளதுடன், வடமத்திய மாகாணம் 68.39 சதவீதத்துடன் குறைந்தளவான உயர்தரத் தகுதிப் பெறுபேற்றைப் பதிவு செய்துள்ளது.
இதனிடையே, 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் கோரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பரீட்சை ஒக்டோபர் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே குறிப்பிட்டுள்ளார்.