மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள வாவியை ஒட்டிய பகுதியில் மரம் ஒன்றின் கீழ் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபரை அடையாளம் காணக்கூடியவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.