2570 ஸ்ரீ புத்த வருடத்தை முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் விழாவை மாத்தறை, திஹகொட மிதெல்லவல புராதன விகாரையை மையப்படுத்தி நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
“அபித்தரேத கல்யாணே” எனும் தொனிப்பொருளின் கீழ், 2026 மே 27 முதல் ஜூன் 01 வரை மாத்தறை நகரம் மற்றும் திஹகொட மிதெல்லவல விகாரையை மையமாகக் கொண்டு “தக்ஷிணா பிரபா” தேசிய வெசாக் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சியின் பிரதான மையங்களில் ஒன்றான மாத்தறை நகரம், புத்த சாசனத்தை ஒளிர்வித்த பல மகா சங்கத்தினர் உருவான புண்ணிய பூமியாகும். மாத்தறை நகரம் கவிதை மற்றும் தர்ம சாஸ்திரப் பணிகள் மூலம் தேசத்திற்கு வழங்கிய தர்மச் செய்தி இன்றும் உயிரோட்டத்துடன் காணப்படுகிறது. எனவே, கடந்த கால பௌத்த மரபுரிமையின் இணையற்ற பெருமையை உலகிற்கு வெளிப்படுத்தவும், அந்த கம்பீரமான ஆன்மீகச் செய்தியை மீண்டும் தேசத்திற்கு நினைவுபடுத்தவும் இம்முறை தேசிய வெசாக் விழாவிற்காக மாத்தறை நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.
“தக்ஷிணா பிரபா” தேசிய வெசாக் விழா, ‘பிரதி பத்தி பூஜா’ மற்றும் ‘ஆமிச பூஜா’ என இரண்டு வலயங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளதுடன், மாத்தறை வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைப் பகுதியை மையமாகக் கொண்டு ‘பிரதி பத்தி பூஜா’ வலயமும், மாத்தறை நகரம் மற்றும் கடற்கரை பூங்காவை அண்டிய பகுதியில் ‘ஆமிச பூஜா’ வலயமும் அமையவுள்ளன.
இந்த வலயத்தில், நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திலிருந்து கொண்டுவரப்படும் புனித தந்த தாது கண்காட்சி, பிரபல்யமான தேரர்களின் தர்ம போதனைகள் மற்றும் தர்ம கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. அத்துடன், கவிதை வடிவிலான தர்ம போதனைகள் மற்றும் அன்னதான நிகழ்வுகள் உட்பட பல்வேறு மத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கோட்டைச் சுவர் மற்றும் நகர மையத்தில் அமைக்கப்படும் பிரம்மாண்டமான தோரணங்கள், மாத்தறை கடற்கரை பூங்காவில் நடைபெறும் ஆக்கபூர்வமான வெசாக் கூடுகள் போட்டி மற்றும் புறாத் தீவுக்கு அண்மித்த கடற்கரைப் பகுதியில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பக்திப் பாடல் நிகழ்ச்சிகள், தென்னிலங்கையின் பாரம்பரிய கலைகளைப் பறைசாற்றும் பொம்மலாட்டங்கள் மற்றும் பல்வேறு கலாசார நிகழ்வுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும், இது பல சிறப்பான மற்றும் கவர்ச்சிகரமான அம்சங்களுடன் வண்ணமயமாக அமையவுள்ளது. வானில் தோன்றும் பௌத்த சின்னங்கள் மற்றும் கோலங்களைக் கொண்ட நவீன தொழில்நுட்பக் காட்சி, தென்னிலங்கைக்கே உரிய பாரம்பரிய பொம்மலாட்டக் கலை ஊடாக “ஜாதக” கதைகளை வழங்குதல் மற்றும் LED திரைகள் மூலம் நகரம் முழுவதும் டிஜிட்டல் “ஜாதக” கதைகள் மற்றும் திரைப்படங்களை காட்சிப்படுத்துதல் என்பன இடம்பெறவுள்ளன.
வெசாக் கூடு திறந்த போட்டி மற்றும் பாடசாலைப் பிரிவு என இரு பிரிவுகளாகவும், பக்திப் பாடல் போட்டிகள் ‘அரச துறை’ மற்றும் ‘பாடசாலைத் துறை’ என இரு பிரிவுகளாகவும் நடத்தப்படும். அத்துடன், படைப்பாற்றல் மற்றும் தரத்தை மதிப்பிடுவதற்காக நிபுணர் குழுவொன்றின் மூலம் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
மே 27 ஆம் திகதி அரச வெசாக் விழா ஆரம்பமாவதுடன், மே 30 வெசாக் பௌர்ணமி தினத்தில் அன்னதானம், உள்ளிட்ட மத வழிபாட்டு நிகழ்வுகளும் நடைபெறும். ஜூன் 01 ஆம் திகதி அரச வெசாக் விழா நிறைவு பெறும்.
இது தொடர்பபன ஏற்பாட்டுப் பணிகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இதற்காகப் பிரதேச செயலகங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பப்பட்டது.
அரச துறை, தனியார் துறை, முப்படைகள் மற்றும் பொலிஸ் உட்பட அனைவரையும் இணைத்துக்கொண்டு, இந்த வெசாக் உற்சவத்தை வெற்றிகரமாக நடத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி செயலாளர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.