காவன்திஸ்ஸ யானையின் மரணம் குறித்து எதிர்காலத்தில் சுயாதீனமான விசாரணை ஒன்று நடத்தப்படும் என சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த விசாரணையின் போது, யானைக்குச் சிகிச்சை அளிப்பதில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டுள்ளதா அல்லது விலங்குக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் ஏதேனும் திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதா என்பது குறித்து ஆராயப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக் குழுவினர் தங்களால் இயன்ற முயற்சியை மேற்கொண்ட போதிலும் யானையின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனமை குறித்து சுற்றாடல் அமைச்சும் தனது கவலையை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மற்றும் நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வேலைத்திட்டத்தை எதிர்காலத்தில் கால்நடை மருத்துவ சேவை மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் ஊடாக மேலும் மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி மேலும் தெரிவித்தார்.










