பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் கருத்து வேறுபாட்டைத் தூண்டும் வகையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துகளை வெளியிட்டதாக ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலேயே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்தத் தீர்ப்பு இன்று புதன்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.
கடந்த 2025 ஜனவரி 9ஆம் திகதி ஞானசார தேரர் குற்றவாளியாகக் காணப்பட்டதையடுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவருக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனையும், 1,500 ரூபாய் அபராதமும் விதித்திருந்தது.
வேறு ஒரு வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை தற்போது அனுபவித்து வரும் ஞானசார தேரர், புதன்கிழமை இடம்பெற்ற நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்தத் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்திலும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மனு 2027 பெப்ரவரி 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் ஞானசார தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்துக்கு தெரிவித்தனர்.
இதனையடுத்து, நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு பெப்ரவரி 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அன்றைய தினம் ஞானசார தேரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.










