பிரான்ஸுக்கான இலங்கை தூதுவர் சுகீஸ்வர குணரத்ன, தனது நியமனச் சான்றிதழை கையளித்த பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனை எலிசே மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வாழ்த்துகளையும் ஜனாதிபதி மக்ரோனிடம் தூதுவர் குணரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், கடல்சார் நடவடிக்கைகள் மற்றும் கலாசாரத் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பிரான்ஸுடனான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த இலங்கை ஆர்வமாக உள்ளதாகவும், பல்தரப்பு அமைப்புகளின் ஊடாகவும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மக்ரோன், இலங்கை ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இலங்கையுடனான உறவுகளையும் பல்துறை ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த பிரான்ஸ் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2023 ஜூலை மாதம் ஜனாதிபதி மக்ரோன் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மீண்டும் வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதாகவும் இரு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தூதுவர் குணரத்ன கடந்த திங்கட்கிழமை எலிசே மாளிகையில் ஜனாதிபதி மக்ரோனிடம் தனது நியமனச் சான்றிதழை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.
25 ஆண்டுகளுக்கும் மேலான இராஜதந்திர சேவையை கொண்டுள்ள சுகீஸ்வர குணரத்ன, இதற்கு முன்னர் எத்தியோப்பியாவுக்கான இலங்கை தூதுவராகவும், ஆபிரிக்க ஒன்றியத்துக்கான நிரந்தர பிரதிநிதியாகவும், நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதி நிரந்தரப் பிரதிநிதியாகவும், ஐக்கிய இராச்சியத்துக்கான பிரதி உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளார்.
அத்துடன், புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதுக்குழு ஆகியவற்றிலும் அவர் இராஜதந்திரப் பதவிகளை வகித்துள்ளார்.










