தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகத்தை தொடர்ந்து கட்டுப்படுத்தினால், பெற்றோலிய சட்டம் மற்றும் அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து சட்ட ஆலோசனை பெறவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோக நிறுவனங்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளதாகவும், அதில் இணக்கப்பாடு எட்டப்படாமல் நிறுவனங்கள் தொடர்ந்து விநியோகத்தை கட்டுப்படுத்தினால் மேலதிக நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ப உள்நாட்டு எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததால் தனியார் விநியோக நிறுவனங்கள் நட்டத்தை எதிர்கொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப உள்நாட்டு எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு தனியார் நிறுவனங்கள் கோரியிருந்ததாகவும், அந்தக் கோரிக்கையை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், டீசலை லீற்றருக்கு 70 ரூபாய் சலுகை அடிப்படையில் விநியோகிப்பதற்காக மூன்று மாத கால சலுகை வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தொடர்ந்து நட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால், உள்நாட்டு சந்தைக்கான எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த நேரிடும் என தனியார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டின் இயல்பான செயற்பாடுகளுக்குத் தேவையான குறைந்தபட்ச எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு பொது அறிவித்தல் ஒன்றை வெளியிடுவதற்கான அதிகாரம் அரசாங்கத்துக்கு நிறுவனங்களுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும், குறிப்பிட்ட நிறுவனங்கள் குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க வேண்டும் என நேரடியாக உத்தரவிடும் அதிகாரம் அமைச்சுக்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தனது விநியோகத்தை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரச்சினை ஆரம்பித்தபோது உள்நாட்டு சந்தையில் சுமார் 50 முதல் 55 சதவீதமாக இருந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பங்கு தற்போது 77 முதல் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக போதுமான எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு தனியார் விநியோக நிறுவனங்களிடமும் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யும் எரிபொருளின் அளவை கட்டுப்படுத்தினால், நடைமுறையில் உள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில் அரசாங்கத்தால் தலையிட முடியும் எனவும், ஆனால் குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட மிக அண்மைய ஒப்பந்தம் உள்ளிட்ட நான்கு ஒப்பந்தங்களிலும், குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் அல்லது பிரதேசத்திற்கு எரிபொருள் விநியோகிக்க மறுக்கும் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் தலையிடுவதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை நிர்ணய சூத்திரத்தின் அடிப்படையில் தங்களது விற்பனை விலையை தீர்மானிக்கும் உரிமை தனியார் நிறுவனங்களுக்கு இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். எனினும், தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் பொதுவாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நிர்ணயிக்கும் விலைக்கு இணையான விலைகளையே நிர்ணயித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 62 இடங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகவும், அதனைத் தீர்க்க அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது எனவும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் அனுர கருணாதிலக இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.









