2018ஆம் ஆண்டு புத்தளம், வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள லக்டோவத்த தோட்டத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில், குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசாரணை அமர்வு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான லால் ரணசிங்க பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் நயோமி விக்கிரமசேகர ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே தண்டனை அறிவிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய ஸஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட குழுவினருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிலையில், லக்டோவத்த தோட்டத்தில் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தொடர்பிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பிரதிவாதிகள் ஆறு பேருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, வெடிபொருளாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நைட்ரேட் பொருள் தொகை, 12 துப்பாக்கி ரவைகள், துப்பாக்கியொன்று, அத்துடன் வெடிபொருட்களை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நைட்ரிக் அமிலம் மற்றும் யூரியா உள்ளிட்ட பொருட்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைப்பற்றியிருந்தது.










