அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் தாமதங்களைக் குறைத்து, சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், திணைக்களத்தின் பணியாளர் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் பின்னர், ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் மாத்திரம் 1,506 அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமதம், சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களின்படி, பரிசோதனைக்காகப் பொருளொன்று கிடைக்கப்பெற்ற இரண்டு மாதங்களுக்குள் அதற்குரிய அறிக்கையை அரச பகுப்பாய்வாளர் வெளியிடுவது கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
இதற்கிடையில், சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, கைதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, ஜூலை முதலாம் திகதி 41,993 ஆகக் காணப்பட்ட சிறைக் கைதிகளின் எண்ணிக்கை, செப்டெம்பர் 30ஆம் திகதியளவில் 36,925 ஆகக் குறைந்துள்ளது. இது 5,068 கைதிகளின் குறைவாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், குற்றவியல் வழக்குகளில் சான்றுப் பொருட்களாகக் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களைக் கையாள்வது தொடர்பான சட்டத் திருத்தங்களும் முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போதைய நடைமுறையில், நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடையும் வரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் முழுத் தொகுப்பையும் பாதுகாத்து வைத்திருப்பதற்குப் பதிலாக, முன்மொழியப்பட்ட திருத்தங்களின் கீழ், அவற்றைப் புகைப்படம் எடுக்கவும், தேவையேற்பட்டால் காணொளியாகப் பதிவு செய்யவும் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும். அதன் பின்னர், சம்பந்தப்பட்ட நீதவானுக்கு அறிவிக்கப்படும்.
இதனையடுத்து, நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, குறித்த போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கு நீதவானுக்கு அதிகாரம் வழங்கப்படும்.
இந்த நடைமுறைகள் சட்டபூர்வமாக முன்னெடுக்கப்படுவதையும், சந்தேகநபர்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்துவதே முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களின் நோக்கம் என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வலியுறுத்தினார்.
குறிப்பாக, நியாயமான விசாரணையைப் பெறுவதற்கான உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.










