அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை ‘ட்ரம்ப் பெருங்கடல்’ (Trump Ocean) என மாற்றுமாறு தான் முன்வைத்த யோசனையை கூகுள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை நிராகரித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தென் கரோலினாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோது, கூகுள் வரைபடத்தில் அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை மாற்றுவது தொடர்பாக சுந்தர் பிச்சையுடன் உரையாடியதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
“சுந்தர், அட்லாண்டிக் பெருங்கடலைப் பற்றி நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். உங்களால் அதைச் செய்ய முடியுமா?” எனத் தான் கேட்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த சுந்தர் பிச்சை, பெருங்கடல்கள் பல நாடுகளின் எல்லைகளில் பரந்து காணப்படுவதால் அவற்றின் பெயர்களை மாற்றுவது ஏனைய புவியியல் இடங்களின் பெயர்களை மாற்றுவதைப் போன்று எளிதானதல்ல எனத் தெரிவித்ததாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
“இல்லை, இல்லை, இல்லை. இந்த முறை என்னால் அதைச் செய்ய முடியாது. பெருங்கடல்கள் வேறுபட்டவை. அவை பல நாடுகளை உள்ளடக்கியுள்ளன. தயவுசெய்து அதனைச் செய்யுமாறு எங்களிடம் கேட்க வேண்டாம்” என சுந்தர் பிச்சை கூறியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை மாற்றும் யோசனையைக் கைவிடப்போவதாகத் தெரிவித்த ட்ரம்ப், அதன் தற்போதைய பெயரையே தொடர்ந்து பயன்படுத்தலாமா என நிகழ்வில் கலந்துகொண்டவர்களிடம் கேட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் புவியியல் இடங்களின் பெயர்களை மாற்றுவதற்கான முயற்சிகளில் ட்ரம்ப் ஈடுபட்டிருந்தார். மெக்சிகோ வளைகுடாவை ‘அமெரிக்கா வளைகுடா’ (Gulf of America) என்றும், ஒன்டாரியோ ஏரியை ‘அமெரிக்கா ஏரி’ (Lake America) என்றும் அமெரிக்க அரசாங்கத்தின் பயன்பாட்டுக்காகப் பெயர் மாற்றம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு கூகுள் வரைபடத்திலும் இந்தப் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏனைய நாடுகளில் வேறுபட்ட பெயரிடும் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு ‘ட்ரம்ப் பெருங்கடல்’ அல்லது ‘அமெரிக்கக் கண்டங்களின் பெருங்கடல்’ (Ocean of the Americas) எனப் பெயரிடும் சாத்தியம் குறித்தும் ட்ரம்ப் முன்னதாகக் கருத்து வெளியிட்டிருந்தார்.
எனினும், சுந்தர் பிச்சையுடனான உரையாடல் தொடர்பாக ட்ரம்ப் தெரிவித்த தகவல்கள் கூகுள் நிறுவனத்தாலோ, சுந்தர் பிச்சையாலோ சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.










