வனக் கள உதவியாளர் ஒருவர், 10,000 ரூபாய் இலஞ்சம் கோரிப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.
ஹேவலுனுவில பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், நேற்று வியாழக்கிழமை மாலை பத்தளை பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹேவலுமன்கட பகுதியில் அரசாங்கத்துக்குச் சொந்தமான சுமார் மூன்று ஏக்கர் காணியில், அனுமதியின்றி மரங்களை வெட்டியமை தொடர்பாக சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்காமல் சேனைப் பயிர்ச்செய்கையைத் தொடர்ந்து மேற்கொள்ள முறைப்பாட்டாளருக்கு அனுமதியளிப்பதற்காக, குறித்த அதிகாரி பல சந்தர்ப்பங்களில் பணம் பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, 2026 ஒக்டோபர் மாதத்திற்கான மாதாந்தக் கொடுப்பனவாக 10,000 ரூபாயைக் குறித்த அதிகாரி கோரிப் பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










