வென்னப்புவ பகுதியில் தங்கச் சங்கிலிப் பறிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைக் கைது செய்ய உதவிய தம்பதியினருக்கு இலங்கை பொலிஸார் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணப்பரிசை வழங்கியுள்ளனர்.
இதன்போது, சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தகவலின்படி, இச்சம்பவம் 2026 மார்ச் 8ஆம் திகதி வென்னப்புவ, புனித அந்தோனியார் மாவத்தையில் இடம்பெற்றுள்ளது.
அப்பகுதியில் உள்ள தமது வீட்டுக்கு வெளியே அலறல் சத்தம் கேட்டதையடுத்து தம்பதியினர் விரைந்து சென்றுள்ளனர். அப்போது, மோட்டார் சைக்கிளின் கீழ் இளம் பெண் ஒருவர் சிக்கியிருப்பதைக் கண்டதுடன், மற்றொரு நபர் மோட்டார் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்வதையும் அவதானித்துள்ளனர்.
இதையடுத்து, மனைவி கீழே விழுந்த பெண்ணுக்கு உதவியபோது, அவரது கணவரான சந்தருவன் ராஜபக்ஷ தப்பிச் சென்ற சந்தேகநபரைத் துரத்திச் சென்றுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சிறிது தூரத்தில் சந்தேகநபரைப் பிடித்த அவர், அப்பகுதி மக்களின் உதவியுடன் வென்னப்புவ பொலிஸார் வரும்வரை அவரைத் தடுத்து வைத்துள்ளார்.
சந்தருவன் ராஜபக்ஷவின் தலையீட்டின் மூலம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குச் சொந்தமான சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்க முடிந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்தம்பதியினரின் செயலைப் பாராட்டும் வகையில், சிலாபம் பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் பெரேரா, ஒக்டோபர் 9ஆம் திகதி வென்னப்புவ உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் வைத்து ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணப்பரிசை வழங்கியுள்ளார்.
இந்த நிகழ்வில் வென்னப்புவ உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.சி. புல்வன்ச மற்றும் வென்னப்புவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என்.ஜே. அத்துகோரள உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.











