ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு எதிராக, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 25 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுவொன்றை அனுப்பத் தீர்மானித்துள்ளனர்.
நீதித்துறையை மதித்து அதன் சுதந்திரத்தை நிலைநிறுத்துமாறு அவர்கள் இந்த மனுவின் மூலம் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மே 25 அன்று வரவிருக்கும் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கத் தயாராக இருக்குமாறு ஜனாதிபதி திஸாநாயக்க சமீபத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் இந்த மனு அனுப்பப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வெளியிட்ட அந்த கருத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர, ரோஹித்த அபேவர்தன, சாமர சம்பத் தசநாயக்க, கயந்த கருணாதிலக்க, இம்ரான் மஹ்ரூப், ரஞ்சித் மத்தும பண்டார, ஹேஷா விதானகே, ஹர்ஷன ராஜகருண, நிஸாம் காரியப்பர், ரவூஃப் ஹக்கீம், ஹெக்டர் அப்புஹாமி, அஜித் பி. பெரேரா, எஸ்.எம். மரிக்கார், ரோஹண பண்டார, சுஜீவ சேனசிங்க மற்றும் திலீப் வெடஆரச்சி உள்ளிட்டோர் இதில் அடங்குகின்றனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கருதப்படும் இந்தக் கருத்து குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீவிர கவலை வெளியிட்டுள்ளனர்.
நீதித்துறையின் சுதந்திரம் பேணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.