அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கடலோரப் போர் கப்பலான USS Tulsa (LCS 16), திட்டமிடப்பட்ட துறைமுகப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று புதன்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டாவது முறையாக USS Tulsa இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த Independence வகை கடலோரப் போர் கப்பல், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது அடுத்தகட்ட பணிகளைத் தொடர்வதற்கு முன்னர் கொழும்பில் எரிபொருள் நிரப்புதல் மற்றும் தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
USS Tulsa கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்திலும் கொழும்புக்கு விஜயம் செய்திருந்தது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர், அமெரிக்க கடற்படைக் கப்பல்களின் விஜயங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், இரு நாடுகளின் கடற்படையினருக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“இலங்கைக்கு விஜயம் செய்யும் ஒவ்வொரு அமெரிக்கக் கப்பலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பையும் எமது கடற்படையினருக்கு இடையிலான உறவுகளையும் மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாகும்” என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான விஜயங்கள் நம்பிக்கையை வளர்ப்பதுடன், இருதரப்பு ஒத்துழைப்பையும் வலுப்படுத்த உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கப்பல் விஜயங்கள், தொழில்சார் பரிமாற்றங்கள், பயிற்சிகள் மற்றும் கூட்டு இராணுவப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை இந்த விஜயம் மேலும் வலுப்படுத்துவதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதில் Cooperation Afloat Readiness and Training (CARAT) எனப்படும் கூட்டு கடற்படைப் பயிற்சியும் அடங்குகிறது.
USS Tulsa, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு, கடல் கட்டுப்பாடு மற்றும் பங்காளி நாடுகளுடன் இணைந்து செயற்படுதல் உள்ளிட்ட பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட Independence வகை கடலோரப் போர் கப்பலாகும்.
அமெரிக்காவின் அலபாமா மாநிலம் மொபைலில் உள்ள Austal USA நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்தக் கப்பல், தனித்துவமான மூன்று உடற்பகுதிகளைக் கொண்ட (trimaran) வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது மணிக்கு 40 கடல் மைல்களுக்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கக்கூடியது.
இதன் விசாலமான விமானத் தளமும் பல்வேறு பணிகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளக்கூடிய பகுதிகளும் ஹெலிகொப்டர்கள், சிறிய படகுகள், ஆளில்லா அமைப்புகள், பணியாளர்கள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு வசதியளிக்கின்றன. கடல்சார் பாதுகாப்பு முதல் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப் பணிகள் வரையிலான பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்தக் கப்பலைப் பயன்படுத்த முடியும்.
அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்திலுள்ள Tulsa நகரின் பெயரைக் கொண்ட இந்தக் கப்பல், 2019 பெப்ரவரி 16ஆம் திகதி சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்க கடற்படையில் இணைக்கப்பட்டது. “Tough, Able, Ready” என்ற கொள்கை வாசகத்துடன் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் USS Tulsa செயற்பட்டு வருகிறது.










