விளக்கமறியலில் இருந்து நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நடத்தப்பட்ட விதம் தொடர்பில் அரசாங்கத்தை விமர்சித்ததுடன், அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுக்க சவுதி அரேபியாவிடம் அரசாங்கம் கோரிக்கை விடுக்கும் நிலையில், ஞானசார தேரரின் விடயத்தில் ஏன் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
“எமது ஜனாதிபதி மற்றொரு நாட்டின் தலைவரிடம் மன்னிப்பு கோர முடியும் என்றால், இங்கும் தனது நடவடிக்கைகள் மூலம் அதற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்” என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்காக சவுதி அரேபிய மன்னரிடம் உத்தியோகபூர்வ இராஜதந்திர கோரிக்கையை முன்வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னதாக தெரிவித்திருந்ததுடன், அவருக்காக சட்ட மற்றும் இராஜதந்திர வழிமுறைகளையும் முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
ஞானசார தேரர் சிறை உடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை தொடர்பிலும் நாமல் ராஜபக்ஷ விமர்சனம் வெளியிட்டுள்ளார். பௌத்த பிக்குகளை நடத்தும் விதம் குறித்து மூத்த பௌத்த மதகுருமார்கள் முன்வைத்த கவலைகளை அரசாங்கம் புறக்கணித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும், ஞானசார தேரர் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் நிலையில், சிறைச்சாலை விதிமுறைகள் அவருக்கும் பொருந்தும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 2019ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பின் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். எனினும், பின்னர் உச்ச நீதிமன்றம் அந்த மன்னிப்பை செல்லுபடியாகாது என தீர்மானித்ததைத் தொடர்ந்து எஞ்சிய சிறைத்தண்டனை அமுல்படுத்தப்பட்டது.
மகா சங்கத்தினரை அரசாங்கம் அவமதிப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியதுடன், பௌத்தம் மற்றும் பௌத்த பாரம்பரியங்கள் தொடர்பில் கவலை வெளியிடுவதை இனவாதமாக சித்தரிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஞானசார தேரரின் விவகாரத்தில் அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறும் அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.










