கண் சத்திர சிகிச்சைக்குப் பிறகு ‘பிரெட்னிசிலோன் அசிட்டேட்’ (Prednisolone Acetate) மருந்து வழங்கப்பட்டதால் பார்வை இழந்த நோயாளிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, நோயாளி ஒருவருக்கு தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் இழப்பீடு வழங்க இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-03-03 முதல் அதே ஆண்டு மே மாதம் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், குறித்த மருந்தை பயன்படுத்தியதால் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்கண் சத்திர சிகிச்சை செய்து கொண்ட சில நோயாளிகளின் பார்வை இழக்கப்பட்ட அல்லது மேலும் பலவீனமடைந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்கண் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பார்வை இழந்த 17 நோயாளிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, குறித்த காலப்பகுதியில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய வைத்தியசாலைகளில் கண் சத்திர சிகிச்சையின் போது இந்த மருந்தை பயன்படுத்தியதால் கண் பாதிப்புக்குள்ளான நோயாளிகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவினால், பார்வை இழந்த மேலும் 4 நோயாளிகளுக்கு இழப்பீடு வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு, அந்த நான்கு நோயாளிகளுக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவிக்க தீர்மானித்துள்ளது.