ஒடிசா மாநிலம், ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கம்ஹரியா கிராமத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வழக்கமாக இந்நேரம் பெய்ய வேண்டிய பருவமழையும் இன்னும் தொடங்காததால், அப்பகுதி மக்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தச் சூழலில், “ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் செய்து வைத்தால், அதற்குப் பலனாக மழை பொழியும்” என்பது அக்கிராம மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. அந்த நம்பிக்கையின்படி, ஜதின் கதுவா (வயது 29) மற்றும் கலந்தி நாயக் (வயது 27) ஆகிய இரு வாலிபர்களுக்கும் திருமணம் செய்து வைக்க கிராமத்தினர் முன்வந்தனர்.
‘மணமகன்’ கோலத்தில் இருந்த ஜதினுக்கும், ‘மணமகள்’ கோலத்தில் தயாரான கலந்திக்கும் வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளங்கள் அதிர, இவர்களின் வினோதத் திருமண ஊர்வலம் வெகு விமரிசையாக நிறைவடைந்தது. பின்னர், கோயில் வளாகத்தில் ஊர் மக்கள் அனைவருக்கும் விருந்து உபசரிக்கப்பட்டது.
உணவு உபசரிப்புக்குப் பிறகு திருமணச் சடங்குகள் அனைத்தும் முறைப்படி நிறைவடைந்தன. இந்த வினோதச் சடங்கின் விதிமுறைப்படி, புதுமணத் தம்பதியராக மாறிய அவ்விரு ஆண்களும் ஒரு நாள் முழுவதும் ஒன்றாகத் தங்கியிருந்தனர். அதன்பின்னர், ஜதினும் கலந்தியும் தத்தமது இயல்பு வாழ்க்கைக்குத் தனித்தனியாகப் பிரிந்து சென்றனர்.