ஐக்கியமான தேசமொன்றை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட வேண்டும் – கிழக்கு ஆளுனர் அநுராதா யஹம்பத்

-கிண்ணியா நிருபர்-

ஐக்கியமான தேசமொன்றை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய சமய விசேட துஆ பிரார்த்தனை மற்றும் வழிபாட்டு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை அனுராதபுர சந்தி அல்ஹுலூர் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.

இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

காலணித்துவ வாதிகள் எமது நாட்டை தம் நலனுக்காகவே பயன்படுத்தினார்கள்.

நாம் எந்தவொரு நாட்டுக்கும் அடிபணிந்து செயற்பட வேண்டிய அவசியம் கிடையாது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடக்கவுள்ளபோதும் 2500 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்ட தேசமே எமது நாடு. அன்று சுதந்திரத்திற்காக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டார்கள்.

ஐக்கியம் மற்றும் ஒருமித்த தேசத்தை கட்டியெழுப்பி வளமான தேசமாக எமது நாட்டை கட்டியெழுப்ப திடசங்கற்பம் பூணல் வேண்டும்.எந்த மத த்தவறாயினும் மனிதாபிமாப்பண்பு கட்டியெழுப்பப்படல் வேண்டும்.

ஒருவரது மதத்தை மற்றவர் மதித்து செயற்படல் வேண்டும். தற்போது பொருளாதார நெருக்கடியில் உள்ள எமது தாய் நாட்டை அதிலிருந்து விடுபட்டு வலுவான தேசமாக மாற்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படல் காலத்தின் தேவையாக அமையப்பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

பல நூறு வருடகாலமாக எமது நாடு காலணித்துவ வாதிகளின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டது. நாட்டின் சுதந்திரத்திற்கு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அன்று பங்களிப்பினை வழங்கினார்கள். காலணித்துவ வாதிகளிலிருந்து சுதந்திரம் கிடைக்கப்பெற்றாலும் பொருளாதார ரீதியான சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள தற்போதும் முயற்சித்துக்கொண்டே இருக்கின்றோம். நாம் குறைந்தபட்சமாவது 100 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றபோதாவது பொருளாதார ரீதியாக உலகில் விருத்தியடைந்த தேசமாக மாற அவசியமானவற்றை ஏற்படுத்திக்கொள்ளல் வேண்டும் என இதன்போது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மெளலவிமார்கள், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர். எம். பி. எஸ். ரத்னாயக்க, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள்,  மத்ரசா மாணவர்கள், பிரதேசவாசிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.